(122) விடை தெரியாத கேள்விகள்!

நான் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது... ஒரு வக்கீல் என்னிடம் சூட்டிங் கேஸ் குறித்து வெகுநேரம் பேசினார்.

Advertisment

அப்போது... வழக்கின் தன்மையிலிருந்து ஆராய்ந்து 11 கேள்விகளை முன்வைத்தார்.

அந்தக் கேள்விகளை நான் உங்கள் முன் வைக்கிறேன்.

01

எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு உன் அப்பா தற்கொலை முயற்சியாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக... உன் அப்பாவின் நெற்றியிலிருந்தும், கழுத்தில் இருந்தும் இரண்டு தோட்டாக்களை எடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். பொதுவாக தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள் துப்பாக்கியை தனக்கு நெருக்கமா வைத்துக்கொண்டு, ஒருமுறைதான் சுட்டுக்கொள்வார்கள். நெற்றிப்பொட்டில் வைத்து தன்னைத்தானே சுடும்போது... Muzle Velocity எனப்படும் துப்பாக்கியின் சக்தியின்படி... தோட்டா துளைத்து மறுபக்கமாக வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் உன் அப்பாவின் நெற்றியில் தோட்டா வெளியேறவில்லையே? "எம்.ஆர்.ராதா பயன்படுத்தியது பழைய துப்பாக்கி' என்கிற பேச்சு இப்போது நிலவுகிறது. அப்படியென்றால் உன் அப்பா எம்.ஜி.ஆரை தூரத்தில் இருந்து சுட்டபோது... தோட்டா எப்படி எம்.ஜி.ஆரின் தொண்டைக்கு உள்ளே சென்று துளைத்து வெடித்தது?

02

உன் அப்பாவின் கழுத்திலும், நெற்றியிலுமாக இரண்டு தோட்டாக்கள் இருந்திருக்கின்றன. தனக்கு நெருக்கமாக துப்பாக்கியை வைத்து, தன்னைத்தானே சுடும்போது தோட்டா வெடித்ததற்கான Powder Spots எனப்படும் சிதறல்கள் இருந்திருக்க வேண்டும். அது இல்லையே... ஏன்?

03

Advertisment

எம்.ஜி.ஆரின் கழுத்திலிருந்து எடுக்கப்பட்ட தோட்டாவில் உன் அப்பாவின் துப்பாக்கி நம்பர் இருந்தது. அதுவும் பாதி தோட்டாதான் எடுக்கப்பட்டது. அதிலும் நம்பர் இருந்தது. உன் அப்பாவிடமிருந்து எடுக்கப்பட்டது முழுத் தோட்டா. ஆனால், அதில் உன் அப்பாவின் துப்பாக்கி நம்பர் இல்லையே?

04

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி "பெற்றால்தான் பிள்ளையா'’ படத்தின் தயாரிப்பாளர் வாசு. இந்த நேரடி சாட்சியின் குணாதிசயம் எப்படி என்று பார்க்கப்பட்டதா? வாசுவும், உன் அப்பாவும்தான் எம்.ஜி.ஆரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். வாசுவின் படத்தயாரிப்புக்கு பணம் கொடுத்து உதவியவர் உன் அப்பா. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததும்... மயக்கமடைந்த எம்.ஜி.ஆரை காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பியபோது... தன்னுடன் வந்த உன் அப்பாவை விட்டுவிட்டு, எம்.ஜி.ஆருடனேயே காரில் வந்திருக்கிறாரே வாசு?

05

சம்பவம் நடந்தபின்... எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிலிருந்து காரில் லிஃப்ட் கேட்டு சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சென்ற உன் அப்பா, "எம்.ஜி.ஆர். என்னைச் சுட்டுட்டார்' என புகார் கொடுத்திருக்கிறார். எஃப்.ஐ.ஆர்.படி எம்.ஜி.ஆரைத்தானே கைது செய்திருக்க வேண்டும். யாரால் அது மாற்றப்பட்டது?

06

Advertisment

இந்தச் சம்பவத்தில் மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டது. அது ஏன் மறைக்கப்பட்டது?

07

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உன் அப்பாவை பரிசோதித்த டாக்டர் ஸ்ரீநிவாசன், "எம்.ஆர்.ராதாவுக்கு உடலில் உள்காயம் உள்ளது' என ரிப்போர்ட் எழுதினார். அந்த ரிப்போர்ட் என்ன ஆனது? சம்பவத்தன்று உன் அப்பாவை யாரும் அடித்தார்களா?

08

எம்.ஜி.ஆரின் வீட்டிற்குச் செல்வதற்காக சுசீலா, வாசுவின் வீட்டிலிருந்து உன் அப்பாவும், வாசுவும், வாசுவின் காரில் ஏறும்போது உன் அப்பா குடித்திருந்ததால் வாந்தி எடுத்ததாக வாசுவின் கார் டிரைவர் சொல்லியிருக்கிறார். மிதமிஞ்சிய குடிபோதையில் இருப்பவர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் "அப்நார்மல் கேரக்டர்ஸ்' ஆவார்கள். அவர்கள் அந்த நிலையில் செய்கிற செயல்கள், "சிவியர் அபன்ஸ்' ஆக எடுத்துக்கொள்ள மாட்டார்களே?

radharavi

09

சூட்டிங் கேஸ் நடந்தபோது... உங்கள் தரப்பு வக்கீல்கள் திரு. என்.டி.வானமாமலை சார், திரு.நடராஜன் சார், திரு. ரவீந்திரன், திரு.அசோகன்... இவர்களெல்லாம் குறுக்கு விசாரணையின்போது இப்படியான கேள்விகளைக் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை.

10

செஷன்ஸ் கோர்ட்டின் தீர்ப்பின்படி உன் அப்பா சிறையில் இருந்தார். ஹைகோர்ட்டில் மேல் முறையீடு உங்கள் தரப்பில் செய்யப்பட்டது. இந்தச் சமயம் பரோலில் வந்த உன் அப்பா திருச்சி -சங்கிலியாண்டபுரத்தில் உங்கள் வீட்டில் தங்கியிருந்தார். உன் அப்பாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்துக்கொண்டிருந்த நீதிபதி டபிள்யூ.எஸ்.கிருஷ்ணசாமி நாயுடு, சங்கிலியாண்டபுரம் சென்று உன் அப்பாவைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். "இந்த அப்பீல் மனுவின் தீர்ப்பு இந்த தேதியில் வரும்' என இருதரப்பு வக்கீல்களுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கவேண்டிய நடைமுறையை நீதிபதி அவர்கள் பின்பற்றாமலே... செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை உறுதிசெய்தாரே?

11

சுப்ரீம் கோர்ட்டில் உங்கள் தரப்பு செய்த அப்பீலை விசாரித்த நீதிபதிகள்... "இதுவரை எம்.ஆர்.ராதா அனுபவித்த மூன்றரை வருட சிறைவாசம் போதும். நன்னடத்தை காரணமாக அவரை விடுவிக்கலாம்' என தீர்ப்புச் சொன்னார்கள். ஆனாலும் உன் அப்பாவை சிறையிலேயே தொடர்ந்து இருக்கும்படி செய்ய, உன் அப்பா மீது வேறு வழக்குகளைப் போட சிலர் சதி செய்தார்களே? அந்தச் சமயம் கலைஞர் முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால்... உன் அப்பா மீது வேறு ஏதாவது வழக்குப்போட்டு, சிறையிலேயே வைத்திருந்திருப்பார்கள்.

-இப்படியாக என்னிடம் தனது சந்தேகக் கேள்விகளை அடுக்கினார் அந்த வக்கீல்.

நான் அவருக்கு மதிப்பளித்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டாலும்... ""நடந்து முடிஞ்ச கதை. இதப்போய் என்கிட்ட சொல்லீட்டிருக்கீங்களே சார்...'' எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

நான் என் அப்பாவுக்கு காரோட்டியாக இருந்த சமயங்களில் என்னிடம் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் இப்போது பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.

"நடிகவேள் எம்.ஆர்.ராதா' என இன்றைக்கும் போற்றப்படுபவராக இருக்கிறார் என் அப்பா. அதுபோதுமே எங்களுக்கு.

சூட்டிங் கேஸால் நாங்க நிலைகுலைந்து நின்றபோதும்... எங்கள் தாயார் தனலட்சுமி அம்மாள் மிகுந்த மனோதிடத்துடன் இருந்து சூழலை எதிர்கொண்டார்.

வீட்டில் இருந்த நகைகள், 18 கார்கள், கையிருப்பு பணம்... என எல்லாவற்றையும் இழக்க வேண்டிவந்தது வழக்குச் செலவுக்காக.

என் அம்மாவின் மனதைரியம் எங்கள் குடும்பத்தைக் கட்டிக்காத்தது.

நான் எனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் கேட்டு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக காளிமுத்து அவர்கள் இருந்தபோது விண்ணப்பித்தேன். ஆனால்... "எம்.ஜி.ஆர். சூட்டிங் கேஸ்' காரணமாக எனது விண்ணப்பத்தை நிராகரித்தனர். நான் 2001-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு... மீண்டும் விண்ணப்பித்தேன். துப்பாக்கி வைத்துக்கொள்ள எனக்கு சைசென்ஸ் கிடைத்தது.

அப்போதைய தி.நகர் போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷனர் முருகன் அவர்கள் "துப்பாக்கி வைத்துக்கொள்வதால் என்ன லாபம்? என்னென்ன நஷ்டம்?' என்பது பற்றி விரிவாக எனக்கு பாடமே நடத்தினார். அதைக் கேட்டபிறகு... "துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டாமோ?' என்றே எனக்குத் தோன்றியது.

நான் பெரும்பாலும் காரில் பயணிக்கிறவன். அதனால் துப்பாக்கியையும் பாதுகாப்பிற்காக காரில் கொண்டுசெல்கிறேன்.

என்றாலும்....

என் கைக்கு எட்டாத தூரத்தில்தான் துப்பாக்கியை வைத்துள்ளேன்.

ஆனாலும்...

என் கண்ணுக்கு எட்டுகிற தூரத்தில்தான் இருக்கிறது என் ஏமச.

சூட்டிங் கேஸ் விஷயங்களையும், அதனால் எழுந்த அவஸ்தைகளையும் பார்த்து, கேட்டு, அனுபவித்த அனுபவத்தில் எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது...

‘கோபமாக இருக்கையில் முடிவெடுக்காதீர்கள். அன்பாக இருக்கையில் சத்தியம் செய்யாதீர்கள்.’

(வரும் இதழுடன் "கர்ஜனை' தொடர் நிறைவு பெறுகிறது)